’கோயில் அறங்காவலர் குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்க வேண்டும்’ – திருமாவளவன்!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும், பெண் ஒருவரையும் உறுப்பினர்களாக அரசு நியமிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  மதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோவிற்கு…

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும், பெண் ஒருவரையும் உறுப்பினர்களாக அரசு நியமிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்தில் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது, ”மதிமுகவின் 29வது பொதுக்குழு வருகிற ஜூன் 14-ம் தேதி நடைபெற இருக்கிறது. மதிமுகவில் 1401 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து சொல்ல வந்தது மனதில் ஒரு எழுச்சியையும், ஊக்கத்தை தருகிறது.

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும். இந்த விவகாரத்தில் இன வெறியுடன் இலங்கை அரசு செயல்படுகிறது.” என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய திருமாவளவன், “மதிமுக பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு அறமாக மதிமுக உள்ளது. இன்று மாலை எனது தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக சார்பில் துரை வைகோ பங்கேற்க உள்ளார்” என்று பேசினார்.

மேலும், விழுப்புரம் மேல்பாதி ஊரில் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும், பெண் ஒருவரையும் உறுப்பினராக தமிழ்நாடு அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.