தியாகம், கருணை, சமத்துவம் போதிக்கும் நாள் – முதலமைச்சர் ஜோசப் விஜய் பக்ரீத் வாழ்த்து!

பக்ரீத் திருநாளை கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தியாகம், கருணை, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை மனித குலத்திற்குப் போதிக்கும் ஈகைப் பெருநாளான பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இப்பெருநாளில் உலகம் எங்கும் அன்பு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் தழைத்தோங்கிட அனைவரும் உறுதியேற்போம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.