இருதய சிகிச்சைக்காக சென்னை கொண்டுவரப்பட்ட குழந்தை – நடுவானில் பிரிந்த உயிர்!

மொரிசியஸ் நாட்டில் இருந்து, சென்னை மருத்துவமனைக்கு இருதய சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட குழந்தை நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொரிசியஸ் நாட்டிலிருந்து ஏர் மொரீசியஸ் பயணிகள் விமானம் 320 பயணிகளுடன் நேற்று மாலை, சென்னை வந்தது. இந்த விமானத்தில் மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த மோனிஸ் குமார் (37)/பூஜா (32) தம்பதியினர், பிறந்து எட்டு நாட்களே ஆன தங்களது பெண் குழந்தை லிஸ்னா உடன் வந்துள்ளனர்.

மொரிசியஸ் நாட்டில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பிறந்த இந்த குழந்தைக்கு, இருதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக இருதய சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனைக்கு, விமானத்தில் மருத்துவ உதவியாளர் துணையுடன் குழந்ததையை கொண்டு வந்துள்ளனர்.

இதனிடயே விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதை அடுத்து விமானிக்கு, விமான பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு குழந்தை மிக ஆபத்தான நிலையில், விமானத்தில் வந்து கொண்டு இருக்கிறது. விமான நிலைய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க கூறினார். அதேவேளை, குழந்தைக்கு நடுவானில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் விமானம், சென்னையில் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி குழந்தையை பரிசோதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதை அறிந்ததும் குழந்தையின் பெற்றோரான மொரிசியஸ் தம்பதியினர் விமானத்துக்குள் கதறி அழுது துடித்துள்ளனர். சக பயணிகளும் விமான ஊழியர்களும், மொரிசியஸ் தம்பதியை ஆறுதல் கூறி தேற்றினர்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விமானம் வழக்கமாக சென்னையில் இருந்து மீண்டும் மொரிசியஸ்க்கு‌, மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் விமானத்தில் குழந்தை உயிரிழந்ததால் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது. அதன் பின்பு சென்னையில் இருந்து மொரிசியத்துக்கு, 288 பயணிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, இரவு 7.35 மணிக்கு, விமானம் புறப்பட்டு சென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.