கோவை மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக, கவுண்டம்பாளையம்
பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் கார் சிக்கிகொண்டது.
கோவை மாநகரில் நேற்று உக்கடம், கவுண்டம்பாளையம் மற்றும் காந்திபுரம்
ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக, பலத்த காற்றுடன்
கூடிய கன மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில்
பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால்,
அப்பகுதியில் செல்லும் மக்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை
நீர் தேங்கி நின்றதால், அவ்வழியாக வந்த கார் ஒன்று மேம்பாலம் அடியில் சிக்கியது. அதில் இருந்த 7 பேர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். பின்னர், அருகில் இருந்தவர்கள் விரைந்து அவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே கார் நேற்றிரவு வெளி கொண்டு வரப்பட்டு , மழை நீர் அப்புறபடுத்தபட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
—-கு.பாலமுருகன்







