மதுரை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த நிதி அளித்த முதியவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
மதுரை தத்தனரி பகுதியில் அப்பளம், வற்றல் வியாபாரம் செய்து வரும் 86 வயது முதியவர் ராஜேந்திரன், கடந்த 2018ம் ஆண்டு ரூ.1.10 கோடியில் திரு.வி.க. மாநகராட்சி பள்ளிக்குப் 10 புதிய வகுப்பறைகள், இறைவணக்கக் கூடம் உள்ளிட்டவற்றைக் கட்டிக் கொடுத்துள்ளார். அண்மையில் கைலாசபுரம் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.71.45 லட்சத்தில் 4 வகுப்பறைகள், கழிப்பறை, உணவுக்கூடம் ஆகியவற்றை கட்டிக் கொடுத்துள்ளார்.
இதையறிந்த பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா, கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அப்போது பேசிய சாலமன் பாப்பையா, தாம் பயின்ற மாநகராட்சிப் பள்ளிக்கு ரு.20 லட்சம் நிதி அளித்ததாகவும், ஆனால், தம்மை விட அதிக தொகையை ஐந்தாம் வகுப்பு பயின்ற ராஜேந்திரன் வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இதனையடுத்து 300 ரூபாயோடு பிழைக்க வந்த தம்மை, மிகப்பெரிய அளவுக்கு உயர்த்திய மதுரைக்கு நன்றியை செலுத்துவதாக வியாபாரி ராஜேந்திரன், தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை அழைத்து கௌரவப்படுத்தினார்.
அப்போது, மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருவதற்காகவும் தனது வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்து, அவருக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









