இறுதியில் வென்ற பாசப்போராட்டம்; தாயுடன் இணைந்த குட்டி யானை

மாவனல்ல பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தாயை பிரிந்த குட்டி யானை இறுதியில் தாயுடன் சேர்ந்த காட்சி காண்போரை மனதை உருக வைப்பதாக இருந்தது.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல…

மாவனல்ல பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தாயை பிரிந்த குட்டி யானை இறுதியில் தாயுடன் சேர்ந்த காட்சி காண்போரை மனதை உருக வைப்பதாக இருந்தது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாவனல்லா பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த கன மழை காரணமாக மாவனல்லா ஆற்றில் குட்டி யானை ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் தாயின்றி தவித்து வந்த குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் எட்டு குழுக்களாக பிரிந்து மாவனல்ல, வாழைத்தோட்டம், ஆனைகட்டி, சிங்கார உள்ளிட்ட வனப்பகுதிகளில் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சீகூர் வனப்பகுதியில் தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது பூபதிப்பட்டி பகுதியில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதையும், கூட்டத்தின் அருகே பெண் யானை ஒன்று தனியாக இருப்பதை அறிந்த வனத்துறையினர் உடனடியாக குட்டியானையை  அந்த பெண் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஆண் யானை வனத்துறையினரை விரட்ட முயன்றது. இதையடுத்து வனத்துறையினர் குட்டியை விட்டு அப்பகுதியில் இருந்து உடனடியாக சென்ற நிலையில் தாய் யானை குட்டி யானை மெதுவாக அழைத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.