கேரளாவின் மானந்தவாடி சாலையில், தாயை தேடி அலையும் குட்டி யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி வனப்பகுதியில், மூன்று மாதங்களே ஆன குட்டியானை ஒன்று தனது தாயை தேடி திருநெல்லி-மானந்தவாடி சாலையில் அங்கும் இங்கும் உலா வந்துள்ளது. மேலும் அந்த சாலை வழியே செல்லும் பேருந்துகள், கார்களை வழிமறித்து அதனை சுற்றி, சுற்றி வந்துள்ளது.
தொடர்ந்து தாயைத் தேடி அந்த பேருந்துகளின் பின்னாலேயே ஓடியுள்ளது. இதனை பேருந்தில் செல்லும் பலரும் வீடியோ எடுத்துள்ளனர். சிலர் வேடிக்கை பார்த்தாலும், சிலர் அதன் நலனில் அக்கறை கொண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தொல்பெட்டி வனவிலங்கு சரணாலயத்தை சேர்ந்த வனத்துறையினர் வந்து குட்டியுடன் சேர்ந்து, தாய் யானையை தேடியுள்ளனர். ஆனால் தாய் யானை கிடைக்கவில்லை.
இதனையடுத்து குட்டி யானைக்கு வனத்துறையினர் உணவு அளித்து, அதனை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து தாயை பிரிந்த குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குட்டி யானை நடத்திய பாசப்போராட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







