26.7 C
Chennai
September 24, 2023
குற்றம் தமிழகம்

சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…. நண்பர்கள் கிண்டல் செய்ததால் விபரீத முடிவு!

சொத்துக்காக ஆசைப்பட்டு, தன்னை விட பலஆண்டுகள் வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர், நண்பர்கள் கேலி செய்ததால், அவமானமானத்தில் அந்த பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார்.

கன்னியாகுமரி அருகே, தமிழக – கேரள எல்லைப்பகுதியான காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சாகாகுமாரி. 51 வயதாகியும் இவருக்கு திருமணமாகாத நிலையில், தமது வயது முதிர்ந்த தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அழகு நிலையம் நடத்தி வரும் சாகாகுமாரிக்கு, 10 ஏக்கர் விவசாய நிலங்களும், சொந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. படுக்கையிலேயே இருக்கும் தாயை கவனித்துக் கொள்வதற்காக, வீட்டிலேயே செவிலியர் ஒருவரையும் அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அடிக்கடி தாயாரை சாகாகுமாரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில், நெய்யாற்றாங்கரை அருகே உள்ள பத்தாங்கல் பகுதியை சேர்ந்த 26 வயதான அருண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுவந்த சாகாகுமாரிக்கும், அருணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சாகாகுமாரியை பொருளாதார பின்னணியை தெரிந்துகொண்ட அருண், அவரை தமது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். 50 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் இருந்த சாகாகுமாரி, அருணின் வலையில் எளிதாக சிக்கியுள்ளார். இதையடுத்து, இருவரும், இரண்டு மாதங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த திருமணத்திற்கு, அருணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், அந்த எதிர்ப்பை மீறி, சாகாகுமாரியை திருமணம் செய்துகொண்ட அருண், வீட்டோடு மாப்பிள்ளையாக, காரகோணம் பகுதியில் சாகாகுமாரியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான், கிறிஸ்துமஸ் தினத்துன்று, தமது மனைவி மின்சாரம் தாக்கி மயங்கிக் கிடப்பதாக அருண் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். பின்னர், அவர்களது உதவியுடன் சாகாகுமாரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே, சாகாகுமாரி இறந்துவிட்டதை உறுதி செய்தனர். எனினும், சாகாகுமாரியின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், இதுகுறித்து கேரள மாநிலம் வெள்ளறடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார், சாகாகுமாரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன், சாகாகுமாரியின் வீட்டை போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையில், கணவர் அருண் அளித்த பதில்களும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, அருண், சாகாகுமாரியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் சாகாகுமாரியை திருமணம் செய்துகொண்ட அருண், மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தமது திருமண புகைப்படங்களை, சாகாகுமாரி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அருணின் நண்பர்கள், வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தது குறித்து அவரை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், சாகாகுமாரிக்கும், அருணுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், சாகாகுமாரியை கொலை செய்ய அருண் திட்டமிட்டுள்ளார். முதலில், மின்சார அடுப்பை பயன்படுத்தி, சாகாகுமாரியை மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய அருண் முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பின்னர்தான், கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவில், சாகாகுமாரியின் உடலில் மின்சார வயரை சுற்றி, மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளார். பின்னர், கிறிஸ்துமஸ் குடிலில் இருந்த அலங்கார விளக்கு மின்சாரம் தாக்கி சாகாகுமாரி இறந்துவிட்டதாக அருண் நாடகமாடியுள்ளார்.

எனினும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அருண் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அருணை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவாக இருந்த ஒரே மகளும் கொலை செய்யப்பட்டு விட்ட நிலையில், படுக்கையில் கிடக்கும் மூதாட்டியின் நிலைதான் பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் ஒன்றும் ஆக போவதில்லை – சீமான்

Web Editor

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

EZHILARASAN D

“இது ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்கும் முயற்சி” – சுகிர்தராணி

Halley Karthik

Leave a Reply