அமெரிக்கா வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
சீன மக்கள் கொண்டாடக்கூடிய சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேருக்கு மிகுந்த காயம் ஏற்பட்டது. 72 வயதுடைய ஹூ சான் திரான் என்பவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார். பிறகு தன்னை தானே சுட்டுக்கொண்டு அவர் இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி அமெரிக்காவில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் முடிந்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் மீண்டும் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. வடக்கு கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ தெற்கே உள்ள பண்ணையில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 67 வயதுடைய சாங்லி ஜாவோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். லோவா மாகாணத்தில் டெஸ் மொய்னஸ் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.