முக்கியச் செய்திகள் தமிழகம்

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

 

சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அக்டோபர் 6, மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார். முதல் கட்டமாக 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டத்தில் 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

நாளை மறுநாள் முதல் வரும் 22ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வரும் 23ம் தேதி வேட்புமனு பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார். அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், 9 மாவட்டங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என அறிவித்த அவர், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் தேர்வு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், வாக்குப்பதிவு காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

வாக்குப்பதிவின் போது நான்கு வித நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் எனக்கூறிய அவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டுகளும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட விவகாரம்: இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Gayathri Venkatesan

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: துரைமுருகன்!

Saravana

பெண் குழந்தையை அனாதை எனக் கூறிய தந்தை கைது!

Vandhana