திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்படும் 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்று இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சியில் பராமரிப்பு பணிகள் இரு முனைகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ரயில்வே தடம் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வரும் நிலையில் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படவில்லை. இதனால் சிக்னல்கள் முழுவதுமாக ஊழியர்களை கொண்டு மட்டுமே இயக்கப்படுகிறது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு வருகை தரும் அனைத்து ரயில்களும் ஏறத்தாழ 5 மணி நேரம் தாமதம் வந்து சேருகிறது. திருச்சி பொன்மலை மற்றும் திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரயில்வே வழித்தடத்தில் முக்கியமான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக சிக்னல் ஊழியர்களைக் கொண்டு மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் ( Manual ) ரயில்கள் புறப்பாடு மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வருகை தாமதமாக வருகிறது. இதேபோல முன்பதிவு இல்லாமல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்படும் எட்டு ரயில்கள் இன்று இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி – திருவனந்தபுரம் அதிவிரைவு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்ஷனில் வழக்கமாக 7:20க்கு புறப்படும். ஆனால் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு மணி நேரம் தாமதமாக 09.20க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி சோழன் அதிவிரைவு வண்டி சென்னையில் இருந்து 7.15 க்கு புறப்படும். பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு மணி நேரம் தாமதம் 9.15க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







