7-ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் காணாமல் போன தமிழக சிலைகளை பல்வேறு வழிகளில் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் தேடி சிலைகளை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி உடையார் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலில் 13 பழங்கால சிலைகள் இருந்ததாகவும், அதன் பின்னர் 2000-ம் ஆண்டு முதல் பழங்கால முருகன் சிலை திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோயிலுக்கு சொந்தமான மூன்று சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்து ஒப்படைத்ததை அறிந்து தற்போது புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனியார் பத்திரிக்கையில் முருகன் சிலை தொடர்பான போட்டோவை ஆதாரமாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அந்த பத்திரிக்கையில் வந்த முருகன் சிலை போட்டோவை அடிப்படையாக வைத்து காணாமல் போன பழங்கால முருகன் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக அந்த புகைப்படத்தை வைத்து இணையதளத்திலும், ஏற்கனவே மீட்கப்பட்டுள்ள தமிழக சிலைகள் இருக்கும் இடங்களிலும் முருகன் சிலை உள்ளதா என தேடியதில் அமெரிக்காவில் ஹோம் லான்ச் செக்யூரிட்டி வசம் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு முருகன் சிலையை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நியூஸ்7 தமிழில் வெளியான முழு காணொலியை காண…




