சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவில் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலம், ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர் பயணத்துக்குப் பிறகு புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தற்போது அது பயணித்து வருகிறது. இதற்காக நிலவின் சுற்றுப்பாதையில் சந்திரயானின் தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
இதனிடையே, உந்து கலனில் இருந்து நிலவில் தரையிறங்க உள்ள லேண்டரை விடுவிக்கும் பணிகள் (வியாழக்கிழமை) நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, நிலவின் தரைப்பகுதிக்கு சந்திரயான்-3 நெருக்கமாக வந்தபோது லேண்டா் வெற்றிகரமாக வெளியேறியது. தற்போது உந்துகலன், லேண்டா் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வருகின்றன.
இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராவால் ஆகஸ்ட் 15,17இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில், நிலவில் தரையிறங்கும் இடத்தை சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் படம் பிடித்துள்ளது.
இந்நிலையில், இப்புகைப்படத்தை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.




