தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 78 யூடியூப் சேனல்கள் 2021-2022ம் ஆண்டில் முடக்கப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமீப காலத்தில் யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளதா? அப்படியெனில் அதன் எண்ணிக்கை மற்றும் விவரங்கள்? எதற்காக முடக்கப்பட்டது? என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தகவல் தொழில்நுட்ப சட்டம் 69-ஏ பிரிவின்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, பொது ஒழுங்கிற்குத் தீங்கு விளைவிக்க கூடிய வகையில் கருத்துக்களைப் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய அரசால் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
அண்மைச் செய்தி: ‘தமிழக வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்’
அந்த வகையில் செய்திகளை வெளியிடும் 78 யூடியூப் சேனல் மற்றும் அதன் சமூக வலைத்தள கணக்குகள் 2021-2022ம் ஆண்டில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவை மீறியதற்காக இதே காலகட்டத்தில் 560 யூடியூப் வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.








