அமெரிக்காவில் ஏழு வயது சிறுமி தனது மூளை அறுவை சிகிச்சைக்காக லெமன் ஜூஸை விற்று நிதி திரட்டி வருவது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் எலிசாபத். இவர் தனது கணவனை இழந்து மகள் லிசாவை ஒற்றையாளாக வளர்த்து வருகிறார். ஏழு வயதான சிறுமி லிசாவின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தனது சிகிச்சைக்கான நிதியை சேர்க்க தொடங்கிய சின்னஞ்சிறு சிறுமி தனது தாயார் நடத்தி வரும் பேக்கரியின் அருகே லெமன் ஜூஸை விற்பனை செய்து வருகிறாள். நாள் ஒன்றுக்கு பத்து டாலர் முதல் 100 டாலர் வரை ஜூஸ் விற்பனை மூலம் பெறுகிறார்.

இதுகுறித்து அவர் தாயார் எலிசபத் கூறுகையில், “நான் எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டேன், ஆனால் லிசா அதனை பொருட்படுத்தாமல் அவர் செய்யும் பணியை தொடர்ந்து வருகிறாள். இதுவரை 8 லட்சத்து 76 ஆயிரத்து 378 ரூபாய் சேர்த்துள்ளார்.” எனக் கூறினார்.
அறுவை சிகிச்சைக்காக மற்றவர்களிடம் பணம் கேட்பதை காட்டிலும் இதுபோன்று நிதி சேர்ப்பது பரவாயில்லை என குட்டி லிசா தெரிவித்துள்ளார். அச்சிறுமி குறித்து அறிந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 2 கோடிக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளனர். தனது சிகிச்சைக்காக தேவைப்படும் பணத்தை தானே சேர்த்து வரும் இந்த சிறுமி, அப்பகுதியினர் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார்.







