ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 7 அடி உயர பாலம்: பொதுமக்கள் வேதனை!

தேனி அருகே சாலையை விட, 7 அடி உயரத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மக்களின் வரிப்பணம் இதுபோன்று வீணாகி…

தேனி அருகே சாலையை விட, 7 அடி உயரத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மக்களின் வரிப்பணம் இதுபோன்று வீணாகி வருவது மனவேதனையை ஏற்படுத்துவதாக பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர் .

தேனி அருகே உள்ள ஜல்லிபட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி முகமை சார்பாக 25 லட்சம்  ரூபாய் செலவில் பழைய பாலத்தை இடித்து விட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் புதிய பாலம் தற்போது கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் சாலையை விட 7 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளதால் பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

வழக்கத்தை விட அதிகமான உயரத்தில் இந்த பாலம் அமைக்கபட்டுள்ளதால் இந்த பாலத்தில் சாலையை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வளைவில் அமைக்கபட்ட இந்த பாலத்தை சாலையில் ஒரு புறம் இணைத்தால், மற்றோரு புறம் உள்ள சாலையினை பயன்படுத்த முடியாத வகையில் இந்த பாலம் அமைக்கபட்டுள்ளது.

இதன் காரணமாக பணிகள் முடிவடைந்த நிலையிலும், பாலத்தை பயன்படுத்த முடியாமல், பாலத்தின் அருகில் ஒட்டி அமைக்கபட்ட பழைய மண் வழித்தடத்தினையே வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனமின்னை மற்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த பாலம் அமைக்கபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. பயன்படுத்த முடியாத நிலையில் அமைக்கப்பட்ட இந்த பாலத்திற்கு 25 லட்சம் ரூபாய் செலவிடபட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் அதிகாரிகளின் அலட்சியத்தினால் இப்படி வீணாகி வருவதாக  பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.