மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும் எனவும், அதே சமயம், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாது என்பதால் சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. மேலும், இட ஒதுக்கீட்டிற்காக அரசு மற்றும் தனியார் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி சரியானது எனவும், அதன்படியே, பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் எனவும், 5 ஆண்டுகளுக்கு பின் இதனை அரசு, மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.







