அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சுயமாக 6,260 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பிகள் செல்லக்கூடிய பாதைகளில் உள்ள 1,860 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும், 141 மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உதகையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் பார்சன்ஸ்வேலி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 12 கிலோமீட்டர் தூரத்திற்கு 20 கோடி மதிப்பீட்டில் புதைவட குழி கேபிள் அமைத்திட திட்ட அறிக்கை தயார் நிலையில் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் முதல்வரிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார்.
தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் 200-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் தேவைப்பட்டால் கோவையிலிருந்து கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் 6,260 மெகாவாட் மின்சாரம் தமிழகம் சுயமாகவே தயாரிக்கும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் 800 மின்கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதற்கு தேவையான உதிரி பாகங்கள் இருப்பதால் தடையின்றி மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருந்தும் கூட தமிழக முதலமைச்சர் சிறப்பான ஆளுமையால் 11 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பில் வைத்துக் கொண்டே இருப்பதாக கூறினார். 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உதகையில் சில் ஹல்லா நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டம் இதுவரை அறிவிப்பாக இருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் தற்போது சில் ஹல்லா திட்டத்தை துவக்கிட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.