தமிழ்நாட்டில் 5 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி,கடந்த மாதம் 12-ஆம் தேதி தமிழ்நாட்டில், முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்ந்து 19-ஆம் தேதியும், 26-ஆம் தேதியும், கடந்த 3 ஆம் தேதி 4 வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந் நிலையில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், 1,800 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.







