சரக்கு லாரி கவிழ்ந்து 53 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெற்கு மெக்சிகோவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் இருந்து சரக்கு லாரிகளில், புலம் பெயர்பவர்களை திருட்டுத்தனமாக ஏற்றிச் செல்வது வழக்கம். இவ்வாறு புலம்பெயர்வது அடிக்கடி நடப்பதும் அவர்களை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்புவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெற்கு மெக்சிகோவில் 107 புலம்பெயர் மக்களை ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய சரக்கு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.
லாரியில் இருந்தவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு இருந்தனர். சியாபஸ் மாநில தலைநகரை நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தபோது, லாரி பாலம் ஒன்றில் திடீரென்று கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சரக்கு லாரியில் இருந்த, பெண்கள், குழந்தைகள் உட்பட 47 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் சாலையில் சிதறிக்கிடந்தன. 58-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசாரும் இணைந்து பொதுமக்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேலும் சிலர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தோரில் பலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. காயமடைந்தவர்களில் சிலர் தெற்கு மெக்சிகோவில் உள்ள கவுதமாலா (Guatemala)வை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.








