சென்னையில் உலா் விழி பாதிப்பு 50% அதிகரிப்பு.. நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…

சென்னையில் உலர் விழி நோயால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 50% உயா்ந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சிதா…

சென்னையில் உலர் விழி நோயால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 50% உயா்ந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சிதா ராஜகோபாலன் கூறியதாவது:

சென்னையில் ஏறத்தாழ 30% பேருக்கு உலர் விழி பாதிப்பு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீர் சுரக்காமல் இருந்தால் உலர் விழி பிரச்னை ஏற்படும். புறச்சூழல்களில் நிலவும் மாசு, அதீத வெப்பம், வேதிப் பொருள்கள் கலந்த காற்று ஆகியவற்றில் இருந்து விழிகளைக் காப்பது கண்ணீர்தான்.

ஆனால், உலர் விழி பிரச்னையுடையவா்களுக்கு சரிவர கண்ணீர் சுரக்காது. இதனால், கண் எரிச்சல், அரிப்பு, கூசும் தன்மை ஆகியவை ஏற்படும். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் பார்வை குறைபாடு ஏற்படக் கூடும். தற்போது, உலர் விழி பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கண்ணில் ஒளிவிலகல் குறைபாடு உடையவர்கள், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தன்னுடல் தாக்கு நோய் (ஆட்டோ இம்யூன்), முடக்குவாத பாதிப்புக்கு உள்ளானோர் ஆகியோருக்கு உலர் விழி பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

பொதுவாக கணினி, கைப்பேசிகளை பயன்படுத்தும்போது 20-20-20 என்ற விதியை பின்பற்றினால் உலர் விழி பாதிப்புகளை தவிர்க்கலாம். டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அதில் இருந்து பார்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பார்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடர்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும்” இவ்வாறு மருத்துவர் ரஞ்சிதா ராஜகோபாலன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.