கோயில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 5வது நிழற்சாலை பகுதியில் 27-வயதான விக்கி (எ) மைக்கா வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்ற நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நண்பர்களுடன் 6வது நிழற்சாலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். வீட்டை விட்டு சென்ற சிறிது நேரத்தில் விக்கியை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியதாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவலறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த விக்கியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடனிருந்த சாமுவேல் என்ற இளைஞரையும் தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர். தலை, கை, கைவிரல் என உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த விக்கியின் தந்தை ராஜா செம்மஞ்சேரி போலீசார் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கரி(எ) ராமு, சின்னராசு, விநாயகம்(எ)கோட்டி, அப்பு(எ) ஜெயவேலு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விக்னேஷ்வரனை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கரி(எ) ராமுவை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா ? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.