தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க தமிழக அரசிற்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக 3 வது மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும். நிரந்தர பட்டாசுக்கடை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்பட வேண்டும். நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை புதுப்பிக்க எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். தீபாவளிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும், பட்டாசுக்கான 18 சதவீத GST வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் ஆகிய 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.







