கஞ்சாவை விற்பனை செய்வதற்காக 5 பேர் மலைஅடிவாரத்தில் பங்கு பிரித்து கொண்டிருந்த போது, அங்கு சுற்றிவளைத்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் மலை அடிவாரத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனை செய்வதற்கு, கஞ்சாவை பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். இந்த தகவல் பல்லாவரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, உடனே மலை அடிவாரத்திற்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்கள் திரிசூலம், வைத்தியர் தெருவை சேர்ந்த ராஜா(வயது -38), பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி பகுதியை சேர்ந்த திவாகர் (வயது-32), கோகுல் (வயது-21), பல்லாவரம், சாவடி தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது-22) மற்றும் ஜமீன் பல்லாவரம், மளகாநந்தாபுரம் பகுதியை சேர்ந்த ஹாசன் (வயது-21) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 5 பேரும் சுரேஷ் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 8.5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ள கஞ்சா சப்ளை செய்து வரும் சுரேஷ் என்பவரைத் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி கஞ்சா மற்றும் போதை பொருட்களை யாராவது விற்பனை செய்வதாக
தெரிந்தால் உடனே காவல் உதவி ஆணையருக்கு தகவல் தெரிவிக்குமாறு தொலைபேசி எண்ணையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். 99403 3885 இந்த எண்ணுக்கு யாராவது தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், அந்த தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்