பழமை வாய்ந்த ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா 42 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பழமை வய்ந்த திருவழுதீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது
வழக்கம். ஆனால் கோயிலின் தேர் பழுதடைந்ததால் கடந்த 42 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கோவிலுக்கு புதிய தேர் தயார் செய்யப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 42 ஆண்டுகளுக்கு பின் வைகாசி திருவிழா இன்று 24ம் தேதி (புதன் கிழமை) தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதன் பின் திருவழுதீஸ்வ்ரரும், பெரியநாயகி அம்பாளும் விஷேச அலங்காரத்தில் கொடி மர மண்டபத்தில் எழுந்தருளினர்.
மேலும் மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க கோயில் கொடி மரத்தில் நந்தி பகவான் உருவம் பொறித்த திருக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கும் விஷேச அபிஷேக, தீபாராதனைகள் இடம்பெற்றது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு தினசரி காலையில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனம் வாகனத்தில் திருவீதி உலா வருதலும், கும்பாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் இடம்பெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நடராஜர்
பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சி 8ம் நாளான 31ம் தேதி (புதன் கிழமை) நடக்கவிருக்கிறது.
அன்று மதியம் நடராஜர் பச்சை பட்டு உடுத்தி, முழுவதும் பச்சை சாத்தி வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். அதன் பின் கங்காளநாதர், சந்திரசேகர் சுவாமிகளும், திருவீதி உலா வருகின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா 9ம் நாளான 1ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
-ரெ.வீரம்மாதேவி







