சென்னையில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மேல் சென்றால் அபராதம் என்ற சென்னை போலீசாரின் அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த திட்டத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையில் “நேரடி போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் நவீன முறை” (Live Traffic Update) என்ற திட்டத்தை சென்னை காவல் ஆணையர் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார். கூகுள் ட்ராபிக் அப்டேட் போல போக்குவரத்து காவலர்களுக்கென பிரத்தியோகமான செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜுவால் சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளும் இரவு நேரத்தில் 50 கிலோமீட்டர் வேகத்திற்குள்ளும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல வேண்டும் என தெரிவித்தார். இந்த வேகத்தை தாண்டி வாகனங்கள் சென்றால் அது ஓவர் ஸ்பீடு என்ற விதிமுறையின் கீழ் வரும் எனவும் தெரிவித்தார். இதனை கண்காணிக்க சாலைகளில் 10 ரேடார் கன் கேமரா நிறுவப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வேகத்தை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி இந்த வேக முறை அமலில் உள்ளதாக தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக சுதாரித்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அதனுடைய
அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் விளக்க கடிதம் ஒன்றை பதிவு செய்தார்கள்.
அதில் வாகனங்கள் வேகம் தொடர்பான விதிமுறைகளை மீறலில் ஈடுபட்டால் அவற்றுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் ரேடார் கன் கேமரா சாலையில் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவு வரும் வரை இந்த அபராதம் விதிக்கப்படாது எனவும், அதுவரை வேகம் தொடர்பான ஆய்வுக்காக பதிவுகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் போக்குவரத்து காவல்துறையினரால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதை கண்காணிக்க LED திரைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அது காட்சிப்படுத்த மட்டுமே… அபராதம் விதிப்பதற்கு அல்ல எனவும் அந்த விளக்கத்தில் கூறியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









