இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு ஆண்டுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்களை உருவாக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஶ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
2023-2024ம் ஆண்டுக்கான அகில இந்திய புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் இந்த மாதம்
18 முதல் செப்டம்பர் 11 வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், புஜ்ஜி பாபு கமிட்டி தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் அகில இந்திய புஜ்ஜி பாபு கிரிக்கெட்
தொடர் திருநெல்வேலி, திண்டுக்கல் நத்தம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் என
நான்கு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் த மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் மூன்று அணிகள் இடம் பெற்று அதில் முதல் இடம் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிக்கு மூன்று லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும்
அணிக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு தொகையாகவும் வழங்கப்பட உள்ளது. உலக கோப்பை போட்டிகளை நடத்த சேப்பாக்கம் மைதானம் தயாராகி வருவதால் இங்கு போட்டிகள் நடத்தப்படவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீகாந்த், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தான் இந்தியாவிலேயே சிறந்த சங்கம். நான் ஆடும் காலத்தில் இருந்தே ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தமிழ்நாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர். புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சுனில் கவாஸ்கர், அசாருத்தீன், ரவி சாஸ்திரி, என பல வீரர்களை உருவாக்கி உள்ளது. புஜ்ஜி பாபு தொடர் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஶ்ரீகாந்த் கூறியதாவது : அகில இந்திய புஜ்ஜி பாபு கிரிக்கெட் ஒரு சிறந்த தொடர். இந்திய அளவில் பெரிய பெரிய நட்சத்திர வீரர்கள் விளையாடிய தொடர். சுனில் கவாஸ்கர், ரோஜர் பின்னி என இதில் விளையாடி பிரபலம் அடையாத வீரர்களே இல்லை. நானும் இந்த தொடரில் விளையாடி இருக்கிறேன்..
அதேபோல இந்தியாவில் உள்ள கிரிக்கெட் சங்கங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
தான் சிறந்த கிரிக்கெட் சங்கம். இதை நீங்கள் எந்த கிரிக்கெட் வீரரிடம்
வேண்டும் என்றாலும் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறினார். மேலும் ஆண்டுக்கு 4
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களையாவது இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு உருவாக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் தெரித்தார்.







