சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி பலத்த காயமடைந்துள்ள நிலையில் மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி விடுத்திருக்கும் எச்சரிக்கையை தற்போது பார்க்கலாம்…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களின் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் சுற்றித்திரியும் மாடுகள் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்குக் கொண்டு செல்லப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தொழுவத்திலிருந்து மாடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் போது கையொப்பம் பெறுவதோடு மூன்றாவது முறையாக மாடு பிடிபடும் பட்சத்தில் அந்த மாடு உரிமையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்படாமல் புளு கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.







