புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான்; மொத்த பாதிப்பு 37ஆக உயர்வு

இந்தியாவில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 37ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த…

இந்தியாவில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 37ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை உலகம் முழுவதும் ஏறத்தாழ 59 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பரில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 37ஆக அதிகரித்துள்ளது. சண்டிகர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் ஏற்கெனவே இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நபருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 22ம் தேதி இத்தாலியிலிருந்து சண்டிகருக்கு வந்த 20 வயதான பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர் பைசர் நிறுவனத்தின் இரு தவணை தடுப்பூசி எடுதுக்கொண்டுள்ளார். ஆனால் தொற்று பாதிப்பு முற்றிலும் அறிகுறியற்றதாக இருந்துள்ளது. இதனையடுத்து இவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட RTPCR பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை.

அதேபோல அயர்லாந்திலிருந்து ஆந்திரா வந்த பயணிக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது விசாகப்பட்டினத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது வரை டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.