பொம்மன், பெள்ளி எனும் தம்பதியின் பாதுகாப்பான கரங்களில் மேலும் ஒரு தாயை பிரிந்த 4 மாத யானைக்குட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி
பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு
குட்டி யானைகள் உட்பட 28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாயை பிரிந்த இரு குட்டி யானைகளை பாராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திகி கொன்சால்வஸ் என்ற பெண் பொம்மன், அவரது மனைவி பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகள் இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் படம் தயாரித்து அப்படத்திற்கு தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என பெயரிட்டு யூடியூப் மற்றும் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தின் மூலம் வெளியிட்டனர்.
https://twitter.com/supriyasahuias/status/1639130248645320704?t=5TkXrWkkGpJySiHzikMWzA&s=08
இதையடுத்து கடந்த 13ம் தேதி நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் படத்திற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து பொம்மன், பெள்ளி தம்பதிகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பொம்மன், பெள்ளி தம்பதி மேலும் ஒரு தாயை பிரிந்த குட்டியானையை எடுத்து வளர்க்க உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் தலைவரான சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பதிவில், பொம்மன், பெள்ளி தம்பதியர் தருமபுரியில் இருந்து மேலும் ஒரு யானை குட்டிக்கு வளர்ப்பு பெற்றோர்கள் ஆகியுள்ளனர். தற்போது அந்த யானைகுட்டி அவர்களுடன் முதுமலையில் உள்ளது. 4 மாதங்களான குட்டி யானை தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.







