மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று 3-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தனர்.
மதுரையில் உள்ள வருமானவரித்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
அப்போது, பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக தங்களது கார்களில் வைத்து எடுத்து சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை இரண்டு வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், அங்கு 3-வது நாளாகவும் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இரா.நம்பிராஜன்









