அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் மாநில யூனியன் உரையை நிகழ்த்தினார். ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய டிரம்ப், ”இரண்டாவது முறையாக நான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில் எட்டு போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன். இதில் இந்திய – பாகிஸ்தான் இடையே நிகழவிருந்த அணு ஆயுத போரும் அடக்கம்” என்றார்.
மேலும் அவர் ”நான் (டிரம்ப்) மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் ஆபரேஷன் சிந்தூரின் போது 35 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி பேசிய டிரம்ப், ”ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது” என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை தானே முடிவுக்கு கொண்டு வந்ததாக 80 முறைக்கு மேல் கூறிவிட்டார். ஆனால் டிரம்பின் இக்கருத்திற்கு இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களே காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது.
தொடர்ந்து அதே ஆண்டு மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் மூண்டது. ஆனால் பல்வேறு அமைதிகட்ட நடவடைக்கைகளுக்கு பின் இரு நாடுகளும் போர் நடவடிக்கைகளை கைவிட்டன.







