சுமார் 300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் (( Joel Le Scouarnec,)) என்பவர், கடந்த 1986ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, சமூகத்தில் மதிப்புமிக்க டாக்டராக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது வீட்டின் அருகிலுள்ள 6 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போது, இது பொய்வழக்கு என்றே பலரும் எண்ணினர்.
இந்த வழக்கு குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவர் ஜோயல் கூறிய விஷயங்கள் பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. அவர் தனது பணிக்காலத்தின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களிடம் தொடர்ச்சியாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 4 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களையே அவர் குறி வைத்துள்ளார்.
சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை அவரே போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இந்த வழக்குகளில் தற்போது 70 வயதான மருத்துவர் ஜோயலுக்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,அவர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.







