அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதன் காரணமாக அதிபராகப் பதவியேற்கும் நிகழ்வை ஜோ பைடன் எளிமையாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் புதிய அதிபர் பதவி ஏற்கும் நிகழ்வு வழக்கமாக ஜனவரி 20-ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறும். இந்த நிகழ்வு வாஷிங்டன்னில் உள்ள தேசிய மாலில் ஒளிபரப்பப்படும். மாலில் குழுமியிருக்கும் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த நிகழ்வை கண்டு கழிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை கொரோனா தொற்று காரணமாக புதிய அதிபர் பதவி ஏற்கும் நிகழ்வு எளிமையாக நடைபெறும் என்று ஜோ பைடன் கூறி இருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விஞ்ஞானிகள், வல்லுநர்கள் அறிவுறுத்தலை பின்பற்ற உள்ளதாக தெரிவித்தார். எனவே மாலில் லட்சகணக்கானோர் கூடும் நிகழ்வை நடத்துவது இந்த முறை சாத்தியமில்லை என்றும் பென்சில்வேனியா அவன்யூவில் பிரமாண்டமான பேரணி நிகழ்வும் நடக்காது என்றும் அவர் கூறினார். பெரும்பாலான நிகழ்வுகள் காணொலி காட்சி வழியே நடைபெறும் என்று தெரிவித்துள்ள பைடன், முன் எப்போதையும் விட அதிகம் பேர் இணையத்தில் நிகழ்வுகளை காண முடியும் என்றும் கூறியுள்ளார்.







