தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் படிப்பை முடித்துள்ள நிலையில், கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பதவி ஏற்ற போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தார். அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கென்று 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களைத் தமிழக அரசு நிறுவியது.
இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி அளிக்கும் கல்லூரிகளில் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பேர் பயிற்சி முடித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
“பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…”
என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







