2வது டி20 போட்டி; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து அந்த…

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு எடுபடவில்லை.

அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கியதால் தான் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட தாண்டி 176 ரன்களை எட்டியது. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரே ஓவர் பந்து வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சும் கச்சிதமாக இருக்கவில்லை.

பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (46 ரன்கள்), ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் (50 ரன்கள்) தவிர யாரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இந்திய அணியின் தொடக்கம் படுமோசமாக இருந்தது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த போட்டி மிக முக்கியமானதாகும். ஏனெனில் இந்த போட்டியில் தோல்வியடைந்தால், தொடரை இழப்பதுடன் டி 20 போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பறிகொடுக்க வேண்டியது வரும். தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.