இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர். 8 ஓவர் போட்டி என்பதால் முதல் பந்து முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால், கேமரூன் கிரீன்5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகினார். இறுதியில் 8 ஓவர்களில் 91 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா– லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இதில் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழைகளை பொழிந்தார். தொடர்ந்து 6 பந்துகளில் ராகுல் ஆட்டமிழக்க ரோகித் உடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அதற்கு அடுத்த பந்திலே சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 4 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.







