இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆக்லாந்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
வெலிங்டனில் நேற்று விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு சென்று பயிற்சி எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டது. நியூசிலாந்து வீரர்கள் வெலிங்டன் கல்லூரியில் உள்ள உள்அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டனர். மழையால் இன்றைய போட்டி பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இன்று அங்கு மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




