சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

2027-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9-ம் தேதியும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு வகுப்புகளுக்குமான பொதுத்தேர்வுகளும் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகின்றன. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், தேர்வுகள் தொடங்குவதற்கு 101 நாட்களுக்கு முன்பே இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

26.5 லட்சத்துக்கும் அதிகமான 10-ம் வகுப்பு மாணவர்கள்!

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தகவலின்படி, 2027-ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு 10-ம் வகுப்பில் 26.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், 12-ம் வகுப்பில் 19.18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் பதிவு செய்துள்ளனர். 10-ம் வகுப்பில் 83 பாடங்களுக்கும், 12-ம் வகுப்பில் 121 பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

10-ம் வகுப்பு முக்கியத் தேர்வு தேதிகள்!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிப்ரவரி 16-ம் தேதி ஓவியம் (Painting) பாடத்துடன் தேர்வுகள் தொடங்குகின்றன. முக்கியப் பாடங்களுக்கான தேர்வு தேதிகள் பின்வருமாறு:

  • பிப்ரவரி 16 – ஓவியம் (Painting)
  • பிப்ரவரி 17 – கணிதம் (Standard & Basic)
  • பிப்ரவரி 22 – அறிவியல்
  • பிப்ரவரி 26 – ஆங்கிலம்
  • மார்ச் 3 – இந்தி (Course A & B)
  • மார்ச் 8 – சமூக அறிவியல்
  • மார்ச் 9 – இறுதிக்கட்ட மொழி மற்றும் தொழிற்கல்விப் பாடங்கள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதியுடன் நிறைவடைகின்றன.

12-ம் வகுப்பு முக்கியத் தேர்வு தேதிகள்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16-ம் தேதி இயற்பியல் (Physics) பாடத்துடன் தொடங்குகின்றன. முக்கியப் பாடங்களுக்கான தேர்வு தேதிகள்:

  • பிப்ரவரி 16 – இயற்பியல்
  • பிப்ரவரி 23 – கணக்குப்பதிவியல்
  • பிப்ரவரி 27 – வேதியியல்
  • மார்ச் 5 – ஆங்கிலம் (Core & Elective)
  • மார்ச் 9 – கணிதம் மற்றும் பயன்பாட்டுக் கணிதம்
  • மார்ச் 16 – பொருளாதாரம்
  • மார்ச் 19 – அரசியல் அறிவியல்
  • மார்ச் 25 – உயிரியல்
  • மார்ச் 27 – வரலாறு
  • ஏப்ரல் 1 – வணிகவியல்
  • ஏப்ரல் 9 – சில்லறை வணிகம் மற்றும் இணையப் பயன்பாடுகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 9-ம் தேதியுடன் நிறைவடைகின்றன.

10-ம் வகுப்புக்கு இரண்டாவது பொதுத்தேர்வு முறை!

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் அடிப்படையில், 2026-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தும் முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியது. அதன்படி, முதல் பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இரண்டாவது பொதுத்தேர்வு மே – ஜூன் மாதங்களில் நடைபெறும். முதல் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் அதிகபட்சம் மூன்று பாடங்களுக்கான இரண்டாவது தேர்வில் விருப்பத்தின் அடிப்படையில் பங்கேற்கலாம். இந்த நடைமுறையின் கீழ் நடைபெறும் இரண்டாவது பொதுத்தேர்வு இதுவாகும்.

காலை 10.30 மணிக்குத் தேர்வுகள் தொடக்கம்!

அனைத்துப் பொதுத்தேர்வுகளும் காலை 10.30 மணிக்குத் தொடங்கும். பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். சில பாடங்களுக்கான தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும். ஒரே மாணவர் தேர்வு எழுதும் பாடங்களுக்கு இடையே கால இடைவெளி வழங்கும் வகையில், 40,000-க்கும் மேற்பட்ட பாடத் தேர்வு சேர்க்கைகளைக் கருத்தில் கொண்டு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். மேலும், முக்கிய நுழைவுத் தேர்வுகளின் தேதிகளையும் கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் பணிச்சுமை உள்ளிட்ட அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்வு அட்டவணையை மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு மையங்களுக்குள் மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என்றும், மாணவர்கள் தங்களது தேர்வு அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.