ரூ.450 கோடியில் கர்நாடகாவில் 2-வது பெரிய விமான நிலையம்; திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது பெங்களூருக்கு அடுத்த படியாக…

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது பெங்களூருக்கு அடுத்த படியாக இரண்டாவது விமான நிலையமாகும்.

கர்நாடகா மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுராவில் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சுமார் ₹ 450 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 775 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் இடம் பெற்றுள்ளன. தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக அந்த மாநிலத்தில் 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். மேலும் பயணிகள் முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகள் பயணிக்க முடியும்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட சிவமோகா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம்,ஷிமோகாவிற்கு வருகை தந்து புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து ரூ.990 கோடியில் அமைய உள்ள ஷிமோகா – சிகாரிப்புரா- ராணிபென்னூர் புதிய ரயில் வழித்தடத்திற்கும், ரூ.100 கோடியில் கோட்டேகன்குரு ரயில் பெட்டி தயாரிப்பு பணிமனை மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம், சாலை மேம்பாட்டுத்திட்டம் , ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 127 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளில் புதிய விமான நிலையம் உள்ளிட்ட சுமார் 3,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, பேசிய பிரதமர் மோடி, “இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கர்நாடகாவின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் பிறந்தநாள் இன்று. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர் தனது வாழ்க்கையை ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார். கடந்த வாரம் கர்நாடக சட்டசபையில் அவர் ஆற்றிய உரை, பொது வாழ்க்கை நடத்தும் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக உள்ளது. “வெற்றியின் உச்சத்தை அடைந்த பிறகும், ஒருவரின் நடத்தையில் எப்படி பணிவு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக எடியூரப்பாவின் இந்த பேச்சு எப்போதும் நம்மைப் போன்றவர்களுக்கும், வரும் தலைமுறைகளுக்கும் ஊக்கமளிக்கிறது,” என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் .

ஏர் இந்தியாவின் விரிவாக்கத் திட்டம் மற்றும் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கான சமீபத்திய கொள்முதல் ஆர்டரை மேற்கோள் காட்டிய பிரதமர், முந்தைய ஆட்சியின் போது எதிர்மறையான காரணங்களுக்காக விமான நிறுவனம் அடிக்கடி விவாதப் பொருளாக மாறியது. ஆனால் இன்று அது “இந்தியாவின் புதிய திறன் வடிவில் உலகிற்கு புதிய விமானத்தை எடுத்து வருகிறது என்று கூறினார்.

இதனையும் படியுங்கள்: அரசியல் விமர்சனங்களுக்கு நான் அஞ்சவில்லை! – நியூஸ்7 தமிழுக்கு குஷ்பூ பிரத்யேக பேட்டி

இதனை தொடர்ந்து பிற்பகலில், பைந்தூர் – ராணிபென்னூரை இணைக்கும் NH 766C இல் ஷிகாரிபுரா நகரத்திற்கான புதிய பைபாஸ் சாலை அமைப்பது உட்பட ₹ 215 கோடி மதிப்பீட்டில் பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேகரவல்லியிலிருந்து அகும்பே வரை NH-169A அகலப்படுத்துதல்; மற்றும் NH 169 இல் தீர்த்தஹள்ளி தாலுகாவில் பாரதிபுராவில் புதிய பாலம் கட்டப்பட்டது.

வரும் மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் கர்நாடகாவிற்கு வருகை தந்து கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று செல்கின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் அவ்வப்போது கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

அதன்படி கடந்த 6-ந் தேதி கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி , 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினார். அதற்கு பிறகு கடந்த 13-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த மாதத்தில் 3-வது முறையாக மோடி கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த 2 மாதங்களில் அவர் 5-வது முறையாக கர்நாடகம் வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சிவமொக்கா மாவட்டம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.