ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே நேற்று மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர்.
இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்வித்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் சீரமைப்பு பணி நடந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிபர் பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டுடேரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.