நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 2,510 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று பதிவான எண்ணிக்கையை காட்டிலும் 82% அதிகமாகும்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 6,358 ஆக இந்த எண்ணிக்கை பதிவாகியிருந்தது. ஒப்பீட்டளவில் தொற்று பாதிப்பு 44% அதிகரித்துள்ளது.
இதுவரை 143 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், மொத்த பாதிப்பு 781ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 21 மாநிலங்களில் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேரும் இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 167 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையில் புதிதாக 2,510 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. நேற்று 1,377 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு 82% அதிகமாக பதிவாகியுள்ளது.
https://twitter.com/mybmc/status/1476183680280236032
நகரில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல், மேயர் கிஷோரி பெட்னேகர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, “கடந்த வாரம் தினசரி பாதிப்பு 150 என பதிவாகியிருந்த நிலையில், தற்போது 2,000ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த பாதிப்பு 2,000ஐ கடக்கும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஒரு நாள் பாதிப்பு 2,510 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








