ராஜஸ்தான் கோட்டாவில் இந்தாண்டு மட்டும் 23 மாணவர்கள் உயிரிழப்பு – தற்கொலையை தடுக்க புதிய நடவடிக்கை..!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்திருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் பல பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு…

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்திருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் பல பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு மாணவர்கள் 9-ம் வகுப்பு முதலே சேர்ந்து நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள். இங்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் பொறியியல் மற்றும் மருத்துவப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 21 மாணவர்கள் தற்கொலை செய்து தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடுமையான அழுத்தம், மன உளைச்சல் போன்றவற்றால் சில மாணவர்கள் இந்த துயரமான முடிவைத் தேடிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இரு மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த அவிஷ்கர் என்ற மாணவர், கட்டடத்தின் 6வதுமாடியில் இருந்து குதித்தும், பிகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டும் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, பயிற்சி மையங்களில் உள்ள மின் விசிறிகளில் தற்கொலைத் தடுப்பு கருவிகளைப் பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று இவ்விரு சம்பவங்களும் நடந்துள்ளன. தற்கொலையை தடுக்க மின் விசிறிகளில் கருவிகளைப் பொருத்துவது ஒன்றே முடிவு அல்ல என்பதையே நேற்யை இரு சம்பவங்களும் உறுதி செய்துள்ளன.

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்த கொண்ட நிலையில், அனைத்து பயிற்சி மையங்களிலும், அடுத்த 2 மாதங்களுக்கு தேர்வு மற்றும் பரீட்சைகள் எதுவும் நடத்தப்படாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மையங்களில் படித்து வரும் மாணவர்களுக்கு உடனடியாக மனரீதியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.