வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு!

தனிநபர் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதில், தனிநபர் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படது.

இதுகுறித்து அமைச்சர் வினோது கூறியதாவது, “கிராம அளவில் வேளாண் இயந்திரமயமாக்கலைப் பரவலாக்கும் நோக்கில், வேளாண் இயந்திரங்கள், கருவிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், சூரியக் கூடார உலர்த்திகள் முதலியன மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

2026-27 ஆம் ஆண்டில், 227 கோடியே 20 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் 24,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமார் 8,870 பவர் டில்லர்கள், 5,090 விசைக்களையெடுப்பான்கள், 1,400 சுழற்கலைப்பைகள், 855 டிராக்டர்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வேளாண்

இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு முதல், சூரியக் கூடார உலர்த்தி அமைக்க அதிகபட்ச மானியமாக இருந்த 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை உயர்த்தி 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். பெண் விவசாயிகளிடையே வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக, இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.