கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் அருவியில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று 17000 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 20,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







