20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே உள்ளூர் வட்டம் கிராமத்தில் நாள் தோறும் 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளூர் வட்டம் கிராமத்தில்…

மன்னார்குடி அருகே உள்ளூர் வட்டம் கிராமத்தில் நாள் தோறும் 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளூர் வட்டம் கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதமாக மின்வெட்டு நிலவுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மின் இணைப்பு வழங்க கோரி அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு மன்னார்குடி-பாமணி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நாள்தோறும் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும், மின் இணைப்பு வழங்க கோரி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது வீட்டை காலி செய்துவிட்டு மின்சாரம் இருக்கும் பகுதிக்கு செல்லுங்கள் என அதிகாரி தெரிவித்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் மின் இணைப்பு வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பாமணி-மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.