துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசா? என்பதை கண்டறிய மரபணு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் பயணித்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் துபாயில் இருந்து சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேருக்கும் புதிய வகை கொரோனாவா அல்லது வேறு வகையா என கண்டறிய மாதிரிகளை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். கொரோனோ தொற்றுக்கு உள்ளான 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.







