பரங்கிமலை அருகே ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

பரங்கிமலை ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்த போது 2 கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையம் அருகே 2 இளைஞர்கள் தண்டவாளத்தை கடந்துள்ளனர். அப்போது எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரயில் மோதியதில் 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் காவல்துறையினர் இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல்(20), சபீர் அகமது(20) என தெரியவந்தது. இவர்கள் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் இன்ஜீனியரிங் 4ம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.

ஆதம்பாக்கம் விடுதியில் தங்கி இருந்த இளைஞர்கள் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே கிரிக்கெட் விளையாட தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.