2.57 lakh people wrote
அரசுப் பணிகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என்று தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 66 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு கடந்த 2020 ஏப்ரல் 5-ஆம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று 66 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப் 1 தேர்வை தமிழகம் முழுவதும் 856 மையங்களில் 2.57 லட்சம் பேர் எழுதினர். கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, தற்போது நடைபெறும் தேர்வில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஹால் டிக்கெட்டுக்கு ஆதார் எண் கட்டாயம், OMR தாளில் விடையைக் குறிப்பதற்கு கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் போன்ற நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இன்றைய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, முதன்மைத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.







