திரையரங்குகளில் நமக்கு பிடித்த ஹீரோ, சண்டைக் காட்சியில் நடித்தால் விசில் பறக்கும். ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற சண்டைக் காட்சி இடம் பெற்ற படங்களில் ஒன்று சுந்தர். சி இயக்கத்தில், விஷால் மற்றும் ஹன்ஸிகா நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படம்.
அந்த திரைப்படத்தின் பெயரைச் சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது விஷால் காரின் முன் பகுதி மீது அமர்ந்து ENTRY கொடுக்கும் மாஸான காட்சி தான். இந்த காட்சி யாராலும் மறக்க முடியாத ஒன்று. இந்த காட்சியை பல செட் போட்டு CRANE உட்பட பல விஷயங்கள் பயன்படுத்தி எடுத்து இருப்பார்கள். ஆனால் 1952-லேயே ஒருத்தர் இந்த மாஸான சீனை நிஜ வாழ்க்கையில் செய்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா?
இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் 1952-ம் ஆண்டு ஆல்பர்ட் கண்டன் என்ற ஓட்டுநர் 20 பயணிகளுடன் பேருந்தை ஓட்டிக் கொண்டு இருந்தார். அந்த பேருந்து, உலகின் பிரபலமான லண்டன் பாலத்தை கடக்க போகும் நேரம் அது. ஓட்டுநரும் எந்தவித சிரமமோ, பதற்றமோ இன்றி பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாரத விதமாக லண்டன் பாலம் இரண்டாகப் பிளக்கிறது.
பாலத்தை நெருங்கி கோண்டு இருக்க, ஓட்டுநருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ப்ரேக் பிடிக்கலாம் என்று முயற்சித்தால் பின்புறம் இருக்கும் இரு சக்கரங்களும் உதறுகின்றன. சற்றும் யோசிக்காத அந்த ஓட்டுநர் பேருந்தை முழு வேகத்தில் செலுத்துகிறார். பாலம் பிளந்து உச்சத்தைத் தொடும் போது, பேருந்து பாலத்திலிருந்து பறக்கிறது. கீழே ஆழமான ஆறுக்கு மேலே 4-5 அடிக்கு அந்தரத்தில் அந்த பேருந்து பறக்கிறது. பின்னர் பாலத்தின் மறுமுனையை அடைந்த அந்த பேருந்து எந்த பாதுகாப்பாக இறங்கிச் சென்றது, இருப்பினும் அதில் பயணித்த 20 பயணிகளில் 13 பேருக்கு சிறுகாயங்களும், 3 பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
பாலம் திறக்கப்படும் போது, சிவப்பு விளக்குகள் மூலம் எச்சரிக்கையும், பாலம் ஆபரேட்டரால் கை மணியும் அடிக்கப்படும். இந்த சம்பவம் குறித்து லண்டன் அரசு விசாரணை நடத்திய போது, பேருந்து ஓட்டுநரான ஆல்பர்ட் குண்டர், பாலத்தின் குறுக்கே செல்லும் போது போக்குவரத்து விளக்குகளில் எந்த எச்சரிக்கையும் இன்றி பச்சை நிறத்தில் இருந்ததாகக் கூறுகிறார்.
வழக்கமான எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்கப்பட்டதாக பாலத்தின் பாதுகாவலர் தெரிவித்தார். பாலத்தின் கண்காணிப்பு பொறியாளர் கூறுகையில், “பேருந்தானது பாலத்தின் மீது பயணித்ததால் கவனிக்கப்படாமல் இருந்தது எனவும், இடைவெளியைக் குறைக்க போதுமான வேகம் இருந்தது, ஆனால் பின்புற சக்கரங்கள் மிகவும் குலுங்கியதால் ஓட்டுநர் முழு வேகத்தில் பேருந்தை இயக்கியதாகக் கூறினார்.” மேலும் டவர் பிரிட்ஜை கட்டுப்படுத்தும் லண்டன் மாநகராட்சி அதிகாரி ஒருவர், “சம்பவம் குறித்து தங்களுக்கு அறிக்கை அளிக்கப்படும். மேலும் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்று பரிசீலிக்கப்படும்” எனவும் கூறினார்.
இருந்தாலும், 20 உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் ஆல்பர்ட் கண்டனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது துரித நடவடிக்கையைப் பாராட்டும் விதமாக பேருந்து உரிமயைாளர்களிடம் இருந்து 10 பவுண்ட்டுகளும், டவர் பிரிட்ஜை நிர்வாகும் செய்யும் சிட்டி கார்ப்பரேஷனிடமிருந்து 35 பவுண்ட்டுகளும் வெகுமதியாக வழங்கப்பட்டன.
பிறகு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இங்கிலாந்தின் பிரபலமான போர்ன் மவுத் ஹோட்டலில் ஒரு வார இலவச விடுமுறை அளிக்கப்பட்டது. இத்துடன் நிற்காமல் அவரது மகன் மற்றும் மகளுக்கு மேயரின் விருந்தும் வைத்தார்.










